தலச்சிறப்பு |
ஒருசமயம் அம்பிகை பசு வடிவம் எடுத்து இத்தலத்திற்கு வந்து இறைவனை பூசித்து வந்தாள். ஒருநாள் பசுவின் கொம்பு லிங்கத்தின்மீது பட, லிங்கத்தில் இருந்து இரத்தம் பீறிட்டது. பசு பால் சொறிந்து காயம் ஆற்றிய தலம்.
மூலவர் 'பசுபதீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன் சிறிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். மூலவர் உச்சியில் காயம் பட்ட வடு உள்ளது. அம்பாள் 'சாந்தநாயகி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள். அம்பாளும் சிறிய வடிவம்.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனை சமேத சுப்பிரமண்யர், மகாலட்சுமி, பிரம்மபுரீஸ்வரர், அகஸ்தீஸ்வரர், விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர், ஜேஸ்டா தேவி, பைரவர், நவக்கிரகங்கள், திருநாவுக்கரசர் சன்னதிகள் உள்ளன.
கார்த்திகை மாதம் வியாழக்கிழமை எமகண்டம் நேரத்தில் தீர்த்தவாரி விழாவும், சங்காபிஷேகமும் நடைபெறுகிறது.
திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|